ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்துத் தெரிவித்த போது, ரம்ஜான் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தக் காரணம்,, காஷ்மீர் மக்கள் மீதான அன்பும், அக்கறையுமே! ரம்ஜான் நோன்பை காஷ்மீர் வாசிகள் அமைதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே பொறுமையைக் கையாண்டோம் என்று கூறினார்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப் பட்டிருந்த காலத்தில் 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றியுள்ளன. எல்லைப் பகுதியில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் 9 பேரும், பொதுமக்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த சண்டை நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர். லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகள் பூஞ்ச், ஜம்மு, நவ்காம் பகுதிகளில் ஊடுருவத் தயாராக இருப்பதாகவும், இந்த மாதம் 450 பயங்கரவாதிகள் ஊடுருவத் தயார் நிலையில் உள்ளனர் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.




