காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சிக்கல் இருப்பதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். அதே நேரம் தமிழகத்துக்கு நீர் திறப்பதில் இந்த முறை சிக்கல் இருக்காது என்று அவரின் தந்தை தேவேகௌட கூறியுள்ளார்.
தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. அப்போது அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நாங்கள் காவிரி ஆணையத்திற்கு எதிரானவர்கள் இல்லை. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அமைப்பை செயல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மாற்றம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வோம். காவிரி ஆணைய உறுப்பினர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.
முன்னதாக, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ள குமாரசாமி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். பின் மத்திய ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க உள்ள நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு நீர் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை தேவேகௌட, இந்த முறை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எவுதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தேவேகௌட இது குறித்துக் கூறியபோது, தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவில் நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது குறித்து கர்நாடக முதல்வர் மத்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறினார்.
தமிழகத்துக்கு ராணுவத் தளவாட அமைப்பு, வேலைவாய்ப்புகள் குறித்து திறந்து வைக்க வந்திருந்த பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.




