சென்னை – சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருபவர்களை அடையாளம் கண்டு, போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதே போல் அண்மைக் காலமாக தமிழகத்தில் கூடங்குளம் தொடங்கி, நெடுவாசல், ஜல்லிக்கட்டு, தேனி நியூட்ரினோ, தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்களில் ஒரு சிலர் உள்நோக்கத்துடன் மக்களிடம் வன்முறைக் கருத்துகளைப் பரப்பி, மக்களை போராடத் தூண்டி விட்டு அவர்களுடன் கலந்து கலவரத்தை நிகழ்த்தி வருவதாகக் கூறப் படுகிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி கலவரத்தை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்ற பன்ருட்டி வேல்முருகன், பாரதிராஜா உள்ளிட்ட சினிமா இயக்குனர்கள், சீமான், திருமுருகன் காந்தி, கௌதமன் உள்ளிட்டோரும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இதனிடையே, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இந்தத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்களை போராட்டத் தூண்டும் வகையிலும், போராட்டத்துக்கு ஆள் சேர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சம்பளத்துக்கு ஆள் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் வன்முறைக் கருத்துகளைத் தெரிவித்து வந்த வளர்மதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சேலம் சென்னை எட்டு வழிச் சாலை குறித்து கருத்து தெரிவித்த பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வளர்ச்சிக்கான திட்டமே என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் மிகவும் பயன்பெறும் என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுக்காது என்றார். வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களே அனைத்து திட்டங்களையும் எதிர்க்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.




