டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட அயர்லாந்துக்குச் சென்றுள்ளது. நேற்று டப்ளின் நகரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர், துவக்கம் முதலே நன்கு அடித்து விளையாடினர். ஸ்டூவர்ட் தாம்ப்சனின் 3வது ஓவரை ஒரு கை பார்த்தார் தவான். அதில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கினின் 4வது ஓவரை பதம் பார்த்தார் ரோஹித். அதில் 2 பவுண்டரி விளாசினார். அடுத்து மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பந்தை சிக்சருக்கு அடித்த தவான், 27 பந்தில் அரைசதம் கடந்தார். ரோகித்தும் தன் பங்குக்கு சிக்சர் அடித்து, அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது தவான் (74) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அபாரமாக ஆடி 97 ரன் சேர்த்திருந்த ரோஹித், 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ரோகித், தவான் இணை, முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்து சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டி–20 அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த இந்திய இணை என்ற வரிசையில் 2வது இடம் பிடித்தது. 2017ல் இலங்கைக்கு எதிராக 165 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளது ரோகித், லோகேஷ் ராகுல் இணை.




