
திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ அல்லது சாதாரண பரிசோதனைக்காகவோ அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். ஹைதரபாத்தில் தங்கியுள்ள எஸ்.ஜானகி, இப்படி மருத்துவமனைக்குச் சென்று வரும்போதெல்லாம், அவரது உடல் நிலை குறித்து ஏதாவது வதந்திகள் பரப்பப் படுகின்றன.
இது குறித்து பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஜானகி, தயவு செய்து என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள் என்று கூறினார். ஆனாலும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.
இந்நிலையில் மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. ஜானகி குறித்து யாரோ சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்கள். இது குறித்து பரிசீலித்த கேரள கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சாதாரணமாகவே, தங்கள் போனுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களைப் படித்து, அது திடீர் அதிர்ச்சித் தகவல் என்பது போல் தோன்றினால், அடடே, அப்டியா, அடடா,, அய்யய்யோ என்ற ரீதியில் உச்சு கொட்டிவிட்டு, முதல்வேலையாக அந்தத் தகவலை அடுத்தவருக்கு பார்வர்ட் செய்வதும், குரூப்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால் அது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது.



