புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக் கடந்து செல்ல யாத்திரீகர்கள் முயன்ற போது, பலத்த மழைம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்க களமிறங்கியுள்ள இந்திய ராணுவ விமானப்படை நேபாள ராணுவத்துடன் இணைந்து முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எம்.ஐ.17 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் என மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று உயிரிழந்த தமிழகத்தின் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் உடல் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை கொண்டு வரப்பட்டு, வேன் மூலம் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.




