பா.ஜ.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ. தோற்கடித்தது
சிவசேனா,பிஜூ ஜனதா தளம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகியது. ஆவேசமாக பேசிய ராகுலின் பேச்சு எடுபடவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மோடி சரவெடியாக பதில் அளித்தார்.
மத்தியில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிறைவடைய இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கபடாததை எதிர்த்து பா.ஜ. கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி விலகியது. அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பார்லி. நடப்பு கூட்டத்தொடரில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். இதற்காக பா.ஜ.வை எதிர்க்கும் கட்சிகள், தமக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பார்லி.மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் இன்று காலை துவங்கியது. காங். தலைவர் ராகுல் மோடி அரசை கடுமையான குற்றம்சாட்டி பேசினார். குற்றச்சாட்டிற்கு மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்தார். ராகுலை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோடி அரசை விமர்சித்து குற்றச்சாட்டி பேசினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். இன்று காலை துவங்கிய பார்லி. கூட்டத்தொடர் 12 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர் 11 மணிக்கு மின்னணு முறையில் ஓட்டெடுப்பு துவங்கியது. முன்னதாக நடந்த குரல் ஓட்டெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. பின்னர் மின்னணு முறையில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்திற்கு எதிராக 325 பேர் ஓட்டளித்தனர். ஆதரவாக 126 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். இதன் மூலம் மோடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.




