ரஃபேல் விமானம் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
தெலுங்கு தேசம் எம்பிகள் கடந்த 20 ஆம் தேதி லோக்சபாவில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானம் கொண்டுவந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நான் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று கூறினார். ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ. 45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ” என்று பிரதமர் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது” என்று கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் டெல்லியில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.அந்தோணி கூறுகையில், “ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விலையை வெளிப்படையாக அறிவிப்பதற்கு தடையாக ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதே போல ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “பிரதமர் மீதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஆனந்த் சர்மா கூறுகையில், “இது லோக்சபாவில் நடந்தது என்பதால், லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறோம்” என்று கூறினார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டிப் பிடித்ததற்காகவும் கண்ணடித்ததற்காகவும் பாஜக ராகுல் காந்தி மீது பாஜக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.