12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கத்துவா மற்றும் உன்னாவோ பகுதிகளில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தொடர்ந்து, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி குற்றவியல் சட்டத்திருத்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவசரச்சட்டத்துக்கு மாற்றாக சட்டத்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வழக்கில், குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதை ஆயுள் சிறை தண்டனையாக நீட்டிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமின் வழங்கப்படாது. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமின் மனு மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசு வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 2 மணி நேர விவாதத்துக்கு பிறகு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.
இதனிடையே, கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் விரைவில் மசோதா கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பல் வன்முறை ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றும், எந்த நாகரீக சமூகத்தாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். குழந்தை கடத்தல் பீதியாலும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் நாட்டில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



