புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும் யுஐடிஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மைய சர்ச்சைகளை அடுத்து நேற்று யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு ஆதார் எண்ணைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்று பகிரங்கமாகப் பகிர சட்டத்தில் இடமில்லை – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண் ரகசியங்கள் கசிவது குறித்தும், ஆதார் எண்ணைக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று விடலாம் என்றும் ஊடகங்களில் ஹேக்கர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிராய் தலைவர் சர்மா, சமூக வலைதளத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, தனது தகவல்களை வெளியிட முடியுமா என சவால் விடுத்தார்.
இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் அவரது மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் நம்பர், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அவர் ஆதார் எண்ணைக் கொண்டு அவ்வாறு வெளியிடவில்லை என்றும், வேறு சில பான் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றைக் கொண்டே இத்தகவல்களைப் பெற்றுள்ளார் என்றும் விளக்கம் கூறப்பட்டது. எனினும், ஒருவரின் தனிப்பட்ட விரல் ரேகை, கருவிழி உள்ளிட்ட அங்க அடையாளங்கள் ஆதார் ஆணையத்தால் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றன. எனவே ஆதார் பாதுகாப்பானதுதான் என்றாலும், பொதுவெளியில் அவற்றை வெளியிட்டு சவால் விடுக்க வேண்டாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.




