செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்களுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. 10 டன் வரையிலான எடை கொண்ட வாகனங்கள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக் கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன.
கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப் பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான அதள பாதாள மலைப்பாதை. இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமான ஓன்று.
இந்த நிலையில் தற்போது தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை msl_13 கண் பாலம் அருகே சாலையில் சரிவு உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு உருவாகியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையான புளியரையிலுள்ள போக்குவரத்து சோதனைச் சாவடி, காவல்துறை சோதனைச் சாவடிகளுக்கும் தகவல்களை தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் கனரக வாகனங்கள் புளியரை காவல்துறை மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப மாவட்ட காவல் துறை உத்திரவிட்டுள்ளது.
இதன் காரணமாக 10 டன்னுக்கு அதிக பாரம் கொண்ட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. எந்த விதமான முன்னறிவிப்புமின்றி திடீர் என வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்கும் நேரத்தில் சாலையை உடனடியாக சீர் செய்து சரக்கு வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




