புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர் மோடிக்கு இல்லை என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக நேற்று மாலை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியது. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் வந்து பார்த்துச் சென்ற பின்னர், நேற்று இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வந்து மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக., வலைத்தளப் போராளிகள் மத்தியில் திடீரென எதிர்ப்பு கிளம்பியது. முன்னர் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு தாமே வலியச் சென்று நலம் விசாரித்தார். அப்போது பாஜக.,வினர் பலரும் புருவத்தை உயர்த்தினர். திமுக., பாஜக., கூட்டணி ஏற்படப் போகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதன் பின்னர்தான் திமுக.,வினர் மோடிக்கு எதிராக பல மோசமான போராட்டங்களை நடத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் காவிரிப் போராட்டத்தை தீவிரமாக நடத்தினர்.
காவிரி போராட்டம் சென்னையில் நடைபெற்ற போது, சென்னைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிக்கு வந்தார் மோடி. அப்போது கோபேக் மோடி என ஹேஷ் டேக் இட்டு, திமுக.,வினர் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அது பாஜக.,வினருக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காட்சி அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் இத்தகைய பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுவது குறித்து தனது வருத்தத்தை மோடி சிலரிடம் பகிர்ந்து கொண்டு, தமிழகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதனை முன்னிட்டே, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாட்டில், தமிழகத்தில் உள்ள சிலரின் துணையுடன், பத்திரிகை முதலாளிகள், ஊடகப் புள்ளிகளை அழைத்து, தில்லிக்குச் சென்று மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தப் பட்டதாம்.
இந்நிலையில் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி வருவதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





இதைதà¯à®¤à®¾à®©à¯ நான௠காலையிலேயே கேடà¯à®Ÿà¯‡à®©à¯ ?