கட்சிகளிடையே கருத்தொற்றுமை எட்டப்படாததால் உடனடி முத்தலாக் வழக்கத்தைத் தடை செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் கொண்டுவரப்படவில்லை.
உடனடியாக மும்முறை தலாக் எனக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய வழக்கம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என 2017ஆகஸ்டு 22ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டுவரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், இந்த மசோதா இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.



