காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21–ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது. இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.




