பத்தனம்திட்ட: கேரள மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாதப்பிறப்பு, நிரப்புத்திரி நடைத்திறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் கேரளம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்நிலையில், மீண்டும் கனமழை கேரளத்தை மிரட்டி வருகிறது. தென் கேரளம் தொடங்கி வடகேரளம் வரை, வெள்ளத்தால் பாதிக்காத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு மாநிலம் முழுதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. குறிப்பாக எர்ணாகுளம், பத்தனம்திட்ட உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், பத்தனம்திட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, அவை தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்நிலையில், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பத்தனம்திட்ட மாவட்டத்தில் பம்பா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா, அனத்தோடு அணைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பம்பா நதி கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிரப்புத்திரி நடைதிறப்புக்கு தரிசிக்க வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.





