புதுதில்லி : நாட்டின் 72வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தில்லி செங்கோட்டைக்கு வந்த அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தில்லி செங்கோட்டையில் 5வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
அவரது உரையில்…
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாடு புதிய வளர்ச்சி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாள் நாட்டிற்கு புதிய பலத்தை தந்துள்ளது. நாட்டின் மகள்கள் நமது நாட்டிற்கு கௌரவத்தைத் தேடி தந்துள்ளனர். எவரெஸ்டில் மூவர்ணக் கொடியின் கௌரவத்தையும் பெருமையையும் இந்திய ராணுவம் பாதுகாத்து வருகிறது.
நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் ஆக்கபூர்மாக அமைந்து, நாட்டிற்கு நீதியை வழங்கியுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசு உரிமை வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும்.
உலகில் 6வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டி உள்ளதை நினைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமை கொள்கின்றனர். நாட்டின் சுதப்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குகிறேன்.
மகாகவி பாரதியார் கூறியதைப் போல் எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகுக்கு அளிக்கும். பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம். நலிவடைந்தவர்களும் எந்தத் தடையும் இன்றி முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர். சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது. சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம்.
நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்கத் துவங்கியுள்ளன. விவசாயத்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்திய அரசின் குறிக்கோள்.
reform, perform, transform இதுவே மத்திய அரசின் தாரக மந்திரம். 2022 க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறி விட்டது. இப்போது யானை விழித்து விட்டது. முதலீடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது. என்று பேசினார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை.. நேரலை




