செங்கோட்டை: கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள், மற்றும் பெரியமரங்கள் அடர்ந்த வனப் பகுதி ஆகும். தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் பயணிகள் ரயிலும் இந்த தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது
தற்போது தென்மேற்கு பருவமழை கடந்த 75 நாட்களாக வலுப் பெற்று பெய்து வருவதால் இந்த ரயில் தடத்தில் மரம் சாய்ந்து ரயில் போக்குவரத்து துண்டிக்கப் படுவதும், ரயில் காலதாமதமாவதும் அடிக்கடி நடந்து வரும் நிலையில் நேற்று 15ந் தேதி இந்த தடத்திலுள்ள ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை ஆகிய 4 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதில் ஏராளமான கடினமான பாறைகள் ரயில் தடத்தில் சரிந்து விழுந்தன. தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கல் சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே பணியாளர்கள் மற்றும் கட்டுமானபிரிவு அதிகாரிகள் குழு இந்த தடத்தில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தடத்தில் ஒருபுறம் மண்சரிவை சீர்செய்யும் பணிகள் நடந்துவரும் போது மறுபுறத்தில் பலத்த மழையினால் மண்சரிவு உருவாகி வருவதால் ரயில்வே பணியாளர் குழுவினர் திணறிவருகின்றனர்.
இந்த தடத்தில் ரயில் பாதையை சீராக்க அதிக நாட்கள் ஆகும் என்பதால் கால முன் அறிவிப்பின்றி ரயில்களை தென்னக ரயில்வே நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ரயில் போக்குவரத்தும், சாலை வழியாக போக்குவரத்தும் துண்டிக்கப் பட்டுள்ளதால் கேரள மாநில மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.




