தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப் பெற்றுள்ளதால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த11 நாட்களாக பலத்த மழை விடாமல் எல்லைபகுதிகளில் பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஓய்வில்லாமல் விடிய..விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக இரு மாநில எல்லைகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கேரளமாநிலத்திற்கு அத்தியாவசியபொருட்களான அரிசி, காய்கறிகள், பால், இறைச்சிக்காக ஆடுகள், கோழி முட்டை உள்ளிட்டவைகளும் சிமிண்ட், கட்டுமான பொருட்கள் மற்றும் மரத்தடிகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி கேஸ் சிலிண்டர்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பெற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் தென்மலை, கழுதுருட்டி ஆகிய பகுதிகளில் மழையின் காரணமாக மண்சரிவு உருவானது. இதனைத் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்தி 10 டன் எடை கொண்ட வாகனங்களை மட்டுமே அனுமதித்து வந்த நிலையில் இன்று செங்கோட்டை கொல்லம் ரயில்பாதையில் நியூ ஆரியங்காவு,கழுதுருட்டி,தென்மலை ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் இந்த தடத்தில் நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மாலையில் கேரளா மாநிலம் ஆரியங்காவு வனத்துறை அலுவலகம் முன்பு தொடங்கி பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்தும்,மழையினால் மண்சரிவு உருவானது
இதனை தொடர்ந்து இந்த தடத்தில் வாகனபோக்குவரத்தை நிறுத்தி சாலையை தற்காலிகமாக சீர்செய்து வாகனபோக்குவரத்தை அனுமதித்தனர். பின்னர் மண் சரிவுகள் குறித்து கொல்லம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இன்று இரவு முதல் இந்த சாலையை தற்காலிகமாக மூட நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது.
1992 ஆம் ஆண்டு உருவான சேதத்திற்குப் பின்னர் இப்போதுதான் இந்தப் பாதை மண்சரிவு காரணமாக மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி வைத்து உள்ளனர். இதன் காரணமாக சுமார் 2 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.




