புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குறிப்பு வெளியிட்டது.
உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 9 வாரங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சையில் உள்ளார். நேற்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்றும் 11 மணியளவில் மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாகக் கூறியுள்ளது. உயிர்காக்கும் கருவிகளின் துணையோடு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், வாஜ்பாயின் உறவினர்கள் என மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் மருத்துவ மனை முன் குவிந்து வருகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தில்லிக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே திரிபுரா ஆளுநர் போட்ட டிவிட்டர் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிப்பதாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு கண்டனம் எழுந்தது. வாஜ்பாய் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ் அப் குழுக்களில் பலரும் வதந்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.