வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி ஸ்மிருது ஸ்தல்லை அடைந்தது. வாஜ்பாய் உடல் சென்ற வாகனத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நடைபயணமாக பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா நடைபயணமாக பங்கேற்றனர்.
இதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல் இடத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
முப்படை வீரர்கள் வாஜ்பாய் உடலை சுமந்து வந்தனர். இதை அடுத்து வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.
பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகளும் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முப்படை தளபதிகள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் தொடர்ந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக., தலைவர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வெளிநாடுகளின் பிரதிநிதிகள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் ருத்ர ஜெபம் முழங்க வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப் பட்டது.





