சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்த வரையில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மறு நாள் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 26 செ.மீ. மழையும் வால்பாறையில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




