சென்னை: கனமழை மற்றும் அணைகள் திறக்கப் பட்டதால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளத்துக்கு துவக்கத்திலேயே முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கேரளத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெறும்.
தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பிவைக்கப்படும்.
மேலும், வேட்டிகள், கைலிகள் 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழுக்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்படும். இப்பணிகளை ஒருங்கிணைக்க, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையின் கீழ், 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்ற உத்தரவிட்டப் பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.




