திருமுருகாற்றுப்படை : ஆறு எனும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருளாகும். ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்துதலாகும். தொல்காப்பிய இலக்கணத்தின் படி, ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்க்கை பற்றியதாகும்.
ஆனால் திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வைப் பற்றியதாகும். திருமுருகாற்றுப்படை எனும் இந்நூல் 317 அடிகளாக இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும். பத்துப்பாட்டு நூலுக்கு கடவுள் வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம்.
பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்கினியர், ” வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றா நொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக ” என்று கூறக் காணலாம். ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவனாகக் கொண்டிருக்க திருமுருகாற்றுப்படையோ இறைவனாகிய முருகக் கடவுளைத் தலைவராகக் கொண்டுள்ளது. இது புலவரலாற்றுப்படை எனவும் வழங்கப்படுகிறது.
ஏனைய ஆற்றுப்படை நூல்களில் பரிசில் பெற விரும்பும் கலைஞரின் வறிய நிலை பற்றிய வருணனைகள் இடம்பெரும். திருமுருகாற்றுப்படையில் இவை காணக்கிடைக்காது. பிறவற்றில் ஆற்றுப்படுத்துவோன், தான் பண்டிருந்த நிலையையும், பரிசில் பெற்ற பின் அடைந்த புது வாழ்வையும், பரிசில் பெற்ற முறையையும் விரித்துக் கூறுவதைக் காணலாம் . இதில் இந்நிலை இல்லை. இப்பாடலின் ஆசிரியர் நக்கீரர் ஆவார். கீரர் என்பது இயற்பெயர் என்றும், ‘ ந ‘ என்பது சிறப்புப் பெயர் என்றும் அறிஞர் கூறுவர்.
முருகப்பெருமானின் பெருமைகள் பேசுவதற்காக எழுந்த இந்நூல் ஆறு பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. தன்னை நாடிவரும் அன்பர்கட்கு அருள் செய்யும் திருத்தலங்களாக திருப்பரங்குன்றமும், திருச்சீரலைவாயும், திருவேரகமும், திருவாவினன்குடியும் பாராட்டப்படுகின்றன. ஒவ்வொரு தலம் பற்றிய செய்தியும் ஒவ்வோர் உட்பகுதியாகக் கொள்ளப்படும். முருகன் குறிஞ்சிக் கிழவனாதலின் வளமார்ந்த குன்றுகள் யாவும் முருகன் இருப்பிடமாகக் கொள்ளப்பட்டு அங்கு கானவர் வணங்கும் பண்பு ஐந்தாவது பகுதியில் வருணிக்கப்படுகிறது.
குறமகள் குறவர்க்குரிய மரபுகளைப் பின்பற்றி முருகப் பெருமானை ஆற்றுப்படுத்தும் முறையும், கானவர் அவ்வாடுகளம் எதிரொலிக்கும்படி முருகனை வேண்டல், இரவலன் முருகனை வாழ்த்த வேண்டிய முறை, முருகன் அருள் செய்யும் திறம் ஆகியவற்றைப் பாடும் பகுதி ஆறாவது பகுதியாகும். இப்பகுதியில் குமரன் குடியிருக்கும் மலையின் வளம் மிக அழகுறப் புனையப்பட்டுள்ளது.
இறைவனை அடைவதற்குரிய நெறிகள் அறிவு நெறி, அன்பு நெறி என்ற இரண்டுண்டு என்றும், அவற்றுள் அன்பு நெறியே திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டது என்று துரை அரங்கனார் கருதுகிறார். மேலும் முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் இவர். ” அன்புடைய ஒருவனை அருளே வடிவான முருகன் தானே நாடி வந்து அருள் செய்யும் தன்மையையே திருமுருகாற்றுப்படை உணர்த்துவதாவது., அன்புடையவனை நாடி வந்து அருள் செய்து அருள் வடிவம் பெருமாறு அவனை ஆக்கிவிட்டால் அவனும் அருள் வடிவமான நிலையில் முருகன் எனவே வழங்குவதற்கு உரியவனாகிவிடுவான். அன்புடையவர்களுள் ஒருவனாய் எண்ணப்படும், முருகன் அருள் பெற்று முருகனானவன், அன்பர்களைத் தேடித் திரியும் எல்லா ஆற்றலும் உடைய முருகனை அவ்வன்பர்களிடத்தில் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படையாம் ” என்கிறார்.
இந்நூலில் சிறப்பறிந்து இதனைச் சைவ நூலாகிய திருமுறையில் 11- ஆம் திருமுறையாகச் சேர்த்துள்ளனர். அருணகிரியார், சிவப்பிரகாசர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்றோர் இந்நூலின் பக்திச் சுவையைப் பாராட்டுகின்றனர்.
– தமிழ் இலக்கிய வரலாறு, ஜனகா பதிப்பகம், சென்னை – 33.




