கேரளத்தில் பெய்து வரும் கன மழையிலும் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் சிக்கியவர்கள் பலர். அவர்களில் கேரள திரையுலகத்தினரும் இருக்கின்றனர். பலரும் தாங்கள் பட்ட சிரமங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்ட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் பிருத்விராஜ் வீடு போல நடிகை அனன்யா வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாம். இரு நாட்கள் சிரமத்தை அனுபவித்து நேற்றுதான் வெள்ளம் வடிந்தது என்று கூறியிருக்கிறார் அனன்யா தனது பேஸ்புக் பக்கத்தில். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் இதனை அவர் உருக்கமாக எடுத்துரைக்கிறார்.
“திடீரென நிமிடத்தில் வெள்ளம் வீட்டை சூழந்து விட்டது. வெளியில் எங்கும் போக முடியவில்லை. தூங்க முடியவில்லை. சமைக்க முடியவில்லை. இரண்டு நாளாக நரகத்தில் இருந்தோம் என்றே வைத்துக் கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமைதான் சற்று வெள்ளம் வடிஞ்சது. அப்போது, ஆஷா சரத் சேச்சிதான் அவர்களுடைய பெரும்பாவூர் வீட்டுக்கு என்னை வந்துவிடு என்று அழைத்தார்கள். அங்கே போன பிறகுதான் என் உறவினர்களின் வீடுகளும் வெள்ளத்தில் சிக்கிய விவரம் தெரிந்தது” என்கிறார் அனன்யா.




