கேரளத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பேருந்து சேவை படிப்படியாக துவங்கும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கேரளத்தில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் ரெட் அலர்ட் – அபாய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். கடலோரக் காவல்படையினர் கொச்சியின் பல பகுதிகளுக்குப் படகில் சென்று மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். உணவு, பால், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
கொச்சியில் சாலை வழியாகச் செல்ல முடியாத பகுதிகளில் கடற் படையினர் ஹெலிகாப்டர் மூலம் உணவு உள்ளிட்ட பொருட்களைப் விநியோகித்தனர். செங்கண்ணூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விமானப்படையினர் குடிநீர், உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம், மகாராஷ்டிரத்தின் புனே ஆகிய நகரங்களில் இருந்து ரயில்கள் மூலம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தும் ரயில்களில் குடிநீர் கொண்டு செல்லப் பட்டு வருகிறது.
இதனிடையே கர்நாடாகா- கேரளா பேருந்து சேவை இன்று மாலை முதல் இயக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் திரும்பப் பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படவுள்ளது.




