திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3 தூண்கள் இடிந்து விழுந்தன. கொள்ளிடம் ஆற்றில், வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தில் விரிசல் ஏற்பட்டு 18, 19, 20வது தூண்கள் இடிந்து விழுந்தன.
திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் மீது இரும்புப் பாலம் கட்டப்பட்டது. 1928 இல் பயன்பாட்டுக்கு வந்த பாலம் இது. இதன் அருகிலேயே சென்னை நேப்பியர் பால வடிவில், புதிய நான்கு வழிச் சாலை பாலம் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. எனவே இந்த பழைய பாலத்தில் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில், சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வந்த வெள்ளத்தின் வேகம் தாங்காமல், இரும்புப் பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. 18, 19, 20 ஆம் எண்ணுள்ள தூண்கள் அடுத்தடுத்து விழுந்து நீருக்குள் மூழ்கின.
இதனை நள்ளிரவிலும் உள்ளூர் மக்கள் புதிய பாலத்தில் இருந்து பார்த்து, புகைப்படம் வீடியோக்களை எடுத்தனர். இதனிடையே, பழைய பாலம் உடைந்து விழுந்ததால் புதிய பாலத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.




