கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த இரு நாட்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து கேரளம் இயல்பு நிலைக்கு மெள்ள மெள்ளத் திரும்பி வருகிறது.
மீட்புப் பணிகளில் ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இது வரை சுமார் 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுடன் நிவாரணம் வழங்கும் பணிகளும் சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன. சாலை சீரமைப்பு, பள்ளிகள் சீரமைப்பு என பணிகளைத் துவக்க மாநில அரசு முடுக்கி விடப் பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் புத்தகங்கள், சீருடைகளை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் கொச்சி விமான நிலையம் நீரில் மூழ்கியிருந்தது. தற்போது வெள்ளம் மெதுமெதுவாக வடிந்து வருகிறது. இதனால் கொச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் விமான சேவை, இன்று முதல் தற்காலிகமாக கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இயக்கப்படுகிறது.




