மக்களின் உயிரை காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூறிய கேரள மீனவர்களுக்கு பாாராட்டுக்கள் குவிகின்றன.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த ஆழப்புழா, எர்ணாக்குளம், திருச்சூர் போன்ற பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவும் பகலுமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் உதவிகளை பாராட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சன்மானம் வழங்க உள்ளதாக அறிவித்தார். அதனை அடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, மீனவர்கள் குழு தலைவர் கெய்ஸ் மொகமத் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக நீங்கள் கூறியதுதான் வேதனையளிக்கிறது. எங்களுக்கு பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள். எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை.
இலவசமாக எங்களின் படகுகளை அரசு சரிசெய்து கொடுப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கேரளா வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



