ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சியில், டோக்லாம் பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் பதவியில் இருந்தால், டோக்லாம் விவகாரத்தை எப்படி தீர்த்து வைப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல், உண்மையாக சொல்லப் போனால் எனக்கு டோக்லாம் பற்றி எந்த விவரமும் தெரியாது…. என்று கூறி அதிர்ச்சி அளித்தார். ஒரு முக்கியப் பிரச்னை குறித்து விவரம் எதுவும் தெரியாமல், வாய்க்கு வந்தபடி, முதிர்ச்சி அற்ற வகையில் விமர்சனம் செய்வது குறித்து ராகுல் மீது கடும் அதிருப்தி எழுந்தது. ராகுலை கேலிகிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.
இந்நிலையில், ஐரோப்பாவில் அதே போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., குறித்து கருத்து தெரிவித்தார் ராகுல். ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்து கடுமையாக பேசிய ராகுல், எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் ஒப்பிட்டு, இரண்டு அமைப்பும் ஒரே வருடத்தில் தொடங்கப்பட்டது, இரண்டும் ஒரே மாதிரியான குறிக்கோள் கொண்டது என்று கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் எதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், யாரோ சொல்வதைக் கேட்டு வாய்க்கு வந்த படி உளறித் தள்ளும் ராகுலுக்கு உண்மையைப் புரிய வைக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒரு பிரதான கட்சியின் தலைவராக இருக்கும் மனிதர், சற்று முதிர்ச்சியுடன் நாட்டு நிலவரங்களை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில், ராகுலுக்கு தங்கள் அமைப்பின் செயல்கள் குறித்து நேரடியாகக் காட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ்.,
இதற்காக அந்த அமைப்பு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இந்த விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப் படவுள்ளது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அழைக்க உள்ளார்கள். ஆனால் இந்த அழைப்பை ராகுல் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் ராகுல் காந்தி இதில் கலந்து கொள்வார் என்றே கூறப்படுகிறது. அரசியல் பாகுபாடு இல்லாத நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தி மரியாதை கருதி செல்ல வாய்ப்புள்ளது.
முன்னதாக, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.




