மகாராஷ்டிராவில் காரை ஓட்டிச் சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய கான்ஸடபிளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிராவில் பத்கா பகுதியில் இருந்து கார் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை நிகில் தம்போலே (வயது 23) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பின் இருக்கையில் வயது முதிர்ந்த அவரது தந்தையார் அமர்ந்து இருந்துள்ளார்.
அந்த கார் காரிகாவன் என்ற பகுதியருகே மதியம் 12.30 மணி அளவில், சுங்க சாவடி ஒன்றின் அருகே வந்தபோது தம்போலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கல்வா போக்குவரத்து பிரிவில் போக்குவரத்து கான்ஸ்டபிளாக இருந்த பண்டாரிநாத் (வயது 35) என்பவர் கண்டார்.
அவர் உடனடியாக அங்குச் சென்று தம்போலை பின் இருக்கைக்கு கொண்டு சென்று அமரச் செய்துள்ளார். பின்னர் சற்றும் காத்திருக்காமல் காரை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று தம்போலை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.
இதில் சிகிச்சைக்குப் பின் தம்போல் உடல்நிலை சீரடைந்துள்ளது. கான்ஸ்டபிள் சமயத்தில் செயல்பட்டதற்காக அவருக்கு உயரதிகாரியின் பாராட்டு கிடைத்துள்ளது.




