புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை; அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது
என்று உச்ச நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல, உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியை அவர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதைக் காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ராஜிவ் சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை கார்த்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். வெளிநாடு சென்றதைக் காரணம் காட்டி, அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜரான போது எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் கோபத்தை வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நாங்கள் கேட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் சரிவர விசாரிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில், கார்த்தி சிதம்பரம் கைதாக வாய்ப்பு உள்ளது.




