புது தில்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ. 20 லட்சம் அதிகரித்துள்ளது. தற்போது மோடியின் சொத்து மதிப்பு ரூ. 2.2 கோடியாக உள்ளது.
கடந்த 2017 -18 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை மோடி தாக்கல் செய்துள்ளார். அதன்படி, கடந்த நிதியாண்டில் மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.2 கோடியாக உள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498 ஆக உள்ளது.
மோடிக்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.11,29,690 இருப்பு உள்ளது. அதே கிளையில் வைப்பு நிதியாக, ரூ.1,07,96,288 உள்ளது. அவரது பெயரில் உள்ள நிரந்தர வைப்புக் கணக்கில், கடந்த ஆண்டு ரூ.90 லட்சம் இருந்தது. தற்போது அதுரூ.1.1 கோடியாக அதிகரித்துள்ளது.
இவை தவிர ரூ.20 ஆயிரத்துக்கு வரி சேமிப்பு பத்திரங்கள் உள்ளன. இவை 2012-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட்டவை. ரூ.5,18,235க்கு தேசிய சேமிப்பு சான்றிதழ், ரூ.1,59,281க்கு எல்.ஐ.சி. பாலிசி உள்ளது.
மோடிக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. அவரிடம் உள்ள தங்க நகைகளில் மாற்றம் இல்லை. ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. ஆமதாபாத் நகரில் 16 ஆண்டுகளுக்கு முன் மோடி வீட்டு மனை வாங்கினார். தற்போது அதன் மதிப்பு ரூ.1 கோடி.
கடந்த ஆண்டு அவரிடம் ரொக்கமாக ரூ.1.5 லட்சம் இருந்தது. தற்போது அதில் 67 சதவீதம் குறைந்து ரூ.48,944 ஆக உள்ளது.




