புது தில்லி: முத்தலாக்கை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடி முத்தலாக் வழங்கும் முறை இருக்கிறது என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கில், உடனடி முத்தலாக் முறை சட்டப்படி செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் உடனடி முத்தலாக்கைத் தடை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதை அடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா கடந்த டிசம்பரில் தாக்கல் செய்யப் பட்டு, அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் முன்வைக்கப் பட்ட இந்த மசோதா, ஆளும் தரப்புக்கு அதிக பெரும்பான்மை இல்லாத நிலையில் நிறைவேறவில்லை. இதை அடுத்து, உச்ச நீதிமன்ற காலக் கெடுவுக்குள் முடிக்க, இது தொடர்பாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்.




