பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைக் காதலித்து அந்த மாணவனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து, அறை எடுத்துத் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியையை கேரள போலீஸார் கண்டறிந்து அழைத்துச் சென்றனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி. சிபிஎஸ்இ., பள்ளி ஆசிரியையான இவர் 10ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவனுடன் தகாத உறவு கொண்டிருக்கிறார். இந்நிலையில், விடுமுறை தினத்தை ஒட்டி கடந்த 23ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாராம்.
இதனிடையே தங்கள் மகனைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அந்த மாணவனை வலைவீசித் தேடினர். இந்நிலையில், மாணவன் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல் மூலம், அந்த மாணவன் சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் இடத்தைக் கண்டறிந்தனர்.
விடுதி ஒன்றுக்குச் சென்ற கேரள போலீசார் அங்கே புகைப்படத்தைக் காட்டி விசாரித்த போது தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக அந்த மாணவனுடன் பெண்மணியும் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்தப் பெண், அவனது ஆசிரியை டியோரனா தம்பி என்றும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது.




