இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று பிற்பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. பலு நகரில் கடல் பல அடி தொலைவுக்கு உள்வாங்கியது. சற்று உயரமான இடங்களில் இருந்தவர்கள் கடல் நீர் உள்வாங்குவதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 10 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் மேலெழும்பின. இந்த சுனாமி பேரலை கடலோரப் பகுதிகளைத் தாக்கி ஊருக்குள் புகுந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்து பலர் மாயமாகினர். அவர்களை சுனாமி பேரலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையால், சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப் படுகிறது. கடலோரப் பகுதிகளில் பலரது உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.




