சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கெதிராக முதல் முதலாக நாட்டு வெடிக்குண்டு தாக்குதல் 1908 ஆம் ஆண்டு நடைபெற்றது. வங்காளத்தில், முஸாப்பூர் எனும் இடத்தில் மாவட்ட நீதிபதி கிங்ஸ்ஃபோர்டு என்பவர் மீது வெடிக்குண்டு வீசி அவரைக் கொல்ல வேண்டும் என்று முயற்சி நடந்தது.
காரணம், சுசில் சந்திர சென் எனும் சிறுவன் ஒருவன் போலீசாரிடம் ஏதோ தகராறு செய்தான் என்பதற்காக அவனுக்கு சவுக்கடி கொடுக்குமாறு தண்டனை விதித்தார் என்பதற்காக.
குதிராம் போஸ் எனும் இளைஞன் ஒருவன் முஸாப்பூரிலிருந்த பிரிட்டிஷ் கிளப் வாசலில் நின்றுக் கொண்டு, கிங்ஸ்ஃபோர்டுடையது என்று எண்ணி ஒரு கோச் வண்டிக்குள் வெடிக்குண்டை வீசினான். ஆனால் அது கிங்ஸ்ஃபோர்டுடையது அல்ல.
அதில் திருமதி கென்னடி எனும் பெண்மணியும்,அவளுடைய மகளும் இருந்தனர்.
இருவரும் கொல்லப்பட்டனர். பாரதத்தில் வெடிக்குண்டு வீசுவது முயற்சி செய்யப்பட்டு வந்த அதே நேரத்தில், இங்கிலாந்தில் சாவர்க்கர் அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.
‘தினசரி கலந்துரையாடல்கள்’, வாரக்கூடுதல்கள்,எழுத்துப் பணி,அச்சடிக்கும் பணி,அச்சடித்த புரட்சிக்கர வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை பார்சல்களாகக் கட்டி இந்தியாவில் பல்வேறு விலாசங்களுக்கு அனுப்புவது என்பது தவிர,
பாரீஸிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த ‘ தல்வார் ‘ ( The Sword ) பத்திரிகையில் தொடர்ந்து எழுதுவது,மற்றும் இத்தாலி புரட்சி வீரன் குஸெப் மாசினியின் ( GUISEPPE MAZZINI ) சரிதத்தை மராத்தியில் மொழி பெயர்த்தல் என்று ஏராளமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மாசினியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆங்கிலேய அரசாங்கம் புத்தகத்திற்கு தடை விதித்தது.கிடைத்த இடங்களிலெல்லாம் புத்தகங்களைப் பறிமுதல் செய்தது. அவருடைய அடுத்த புத்தகம் ‘ முதல் சுதந்திரப் போர் 1857 ‘ ஆகும்.
ஆங்கிலேயர்களால், ‘ சிப்பாய் கலகம் ‘ என்று சிறுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் உண்மை வரலாற்றை வெளிக் கொணர்ந்து வந்தார். இந்த புத்தகத்தையும் அவர் மராத்தி மொழியிலேதான் எழுதினார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி முடித்தவுடன், ‘ FREE INDIA SOCIETY ‘ ன் வாரக் கூடுதல்களின் போது,ஒவ்வொரு வாக்கியமாகப் படித்துக் காட்டி,
உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்குவார்.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வெகு நாளாகவே சந்தேகங் கொண்டு மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் உளவுத்துறையினர் இந்த அமைப்பிற்குள் ஊடுருவி,புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களை திருடி, இந்தியாவிற்கு அனுப்பினர்.
அந்த அத்தியாயங்களிலிருந்த விஷயங்கள் அபாயக்கரமானவை எனக் கருதி,புத்தகம் அச்சிடப்படுவதற்கு முன்பே,இன்னும் சொல்லப்போனால் முழுவதுமாக எழுதப்படுவதற்கு முன்பே, இந்திய ஆங்கிலேய அரசாங்கம் அதற்குத் தடை விதித்தது.
ஆனால் காணாமல் போன இரண்டு அத்தியாயங்களையும் மீண்டும் எழுதி,முழு புத்தகத்தையும் ,முதல் சுதந்திரப் போரின் 50வது நினைவு வருடமான 1907ல் சாவர்க்கர் வெளியிட்டார்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




