அருணாச்சல் அரசியல் நிலவரம்: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி,

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் எடுத்துள்ள முடிவுகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி, முதல்வராக உள்ளார். மாநில ஆளுநரான ஜோதி பிரசாத், மாநில அரசையோ அல்லது முதலமைச்சரையோ கலந்து ஆலோசிக்காமல், சட்டசபை கூட்டத் தொடருக்கு தன்னிச்சையாக அறிவிப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை தானே முடிவு செய்துள்ள ஆளுநர், சபை நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தலைமையேற்க மாட்டார் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து, அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த அவர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஆளுநர் மூலம், மாநில அரசை கவிழ்க்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர். அதனால் ஆளுநரின் இந்த முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.