பிளஸ்-1 பயிலும் புனே மாணவியை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி: மீட்ட போலீசார்

மும்பை:
மூளைச் சலவை
மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு அல்ஐசீரா தொலைக்காட்சியில் சிரியா போர் தொடர்பான டாகுமெண்டரியை பார்த்துள்ளார். அதன் பிறகு தினமும் அல்ஐசீரா டி.வி. செய்திகளைப் பார்த்த அவர் மனதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் செய்த பிரசாரத்தால், அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவனின் நட்பு கிடைத்ததும், இந்தியாவைச் சேர்ந்த சிராஜுதீன் என்ற பயங்கரவாதியுடன் அந்த மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டதும், அவருடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 200 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அவர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி பேசி வந்தார். அவர்கள் அந்த மாணவியிடம் தினமும் பேசியுள்ளனர். இதனால் அந்த மாணவி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அடிமையாகவே மாறியுள்ளார். பயங்கரவாதிகள் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார். இதனால் அவரது எல்லா பழக்க – பழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. எப்போதும் ஜீன்ஸ் அணிந்து நவ நாகரீக மங்கையாக வந்தவர் அதை துறந்து பர்தா அணியத் தொடங்கினார். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர் பெற்றோர் இதுபற்றி விசாரித்த போது அந்த மாணவி பதில் சொல்லாமல் எரிச்சலில் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதி சிராஜுதீன் அண்மையில் ராஜஸ்தானில் போலீசாரிடம் பிடிபட்டதால் அவன் மூலம் புனே மாணவி ஐ.எஸ். இயக்கத்துக்கு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அந்த மாணவியை கண்காணித்தனர். சமூக வலைத் தளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் அந்த மாணவி யார் – யாரிடம் எல்லாம் பேசி வருகிறார் என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற் பட்டது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் அந்த மாணவியை 2016-ல் சிரியாவுக்கு அழைத்துக் கொள்வதாக உறுதி அளித்திருந்தது தெரிய வந்தது. அதற்கு முன்பு அவருக்கு ரகசிய ஆயுத பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பியிருந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பதில் அனுப்பிய அந்த மாணவி டாக்டருக்குப் படிக்க தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதேநேரன்ம் தேவைப்படும் பட்சத்தில் தற்கொலை பயங்கரவாதியாக மாறுவதற்கு, தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், அரேபியா, கென்யா, துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனும் அவர் தொடர்பில் இருப்பது தெரிந்தது.

இதை அடுத்து, அந்த மாணவியை மீட்டு, நல்வழிப்படுத்த பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இந்த வாரத் தொடக்கத்தில் அவர்கள் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று விசா ரணை நடத்தினார்கள்.

அதன் பிறகே அந்த மாணவி ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் மகள் தற்கொலை பயங்கரவாதியாகும் அளவுக்கு மனம் மாறுவாள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று கதறியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவியிடம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் எத்தகைய கொடூர சிந்தனை கொண்டவர்கள் என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்த ஈவு இரக்கமற்ற கொலைகள் பற்றியும் கூறப் பட்டது.

ஆனால், இந்த விளக்கங்களை அந்த மாணவி ஏற்க மறுத்தார். இதை அடுத்து புனேயில் உள்ள ஒரு மௌல்வி உதவியுடன் மாணவியிடம் பேசினார். மருத்துவர்கள் மூலமாகவும் மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மாணவி சமரசம் ஆகி கொஞ்சம் தெளிவு கண்டார்.