பகவத் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஆளுநர் பாராட்டு

maryam_siddique மும்பை: “பகவத் கீதை’ போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் செவ்வாய்க் கிழமை நேரில் அழைத்து பாராட்டி, கெளரவித்தார். அகில உலக கிருஷ்ணா அமைப்பு இஸ்கான் சார்பில், மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான பகவத் கீதை போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. 90 அரசுப் பள்ளிகள் மற்றும் 105 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பேட்டியில் பங்கேற்றனர். இதில், 6-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி மரியம் ஆசிஃப் சித்திக் முதலிடம் பெற்றார். இவரது பயிற்சியையும் சாதனையையும் பாராட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், மரியம் ஆசிஃப் சித்திக், அவரது பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டினார். மரியம் ஆசிஃப் சித்திக்குக்கு புத்தகங்களைப் பரிசாக அளித்து கெளரவித்தார். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சஞ்சய் நிரூபம், மரியம் ஆசிஃப் சித்திக்குக்கு புதன்கிழமை விருந்தளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சித்திக் திகழ்கிறார்’ என்று பாராட்டினார்.