பம்பா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது! இன்றைய பூஜைகளுக்குப் பின்னர், இரவு அடைக்கப்படுகிறது.
கேரள அரசின் தீவிர முயற்சியால், பெண்கள் சபரிமலை சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டால், பிரச்னை ஏற்படக் கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் மற்றும் போலீஸ் நண்பர்கள் என கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிறப்பு பணியாக சபரிமலை சந்நிதியை ஒட்டி நிறுத்தப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் சபரிமலைக்கு வராமல் தவிர்த்து விட்டனர். ஆனால், கம்யூனிஸ தொண்டர் ஒருவர் தன் மனைவி இரு குழந்தைகளை வற்புறுத்தி அழைத்து வந்த நிலையில், அவரும் பம்பையுடன் நின்றுவிட்டார். அஞ்சு என்ற 30வயதுப் பெண், இது குறித்துக் கூறுகையில், தம்மால் தன் கணவரின் வற்புறுத்தலுக்காக சபரிமலை மேலே செல்ல மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றார். அவர் பம்பையில் பாதுகாப்புடன் நின்றுவிட்டார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பால ராம வர்மாவின் பிறந்தநாளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. இதை அடுத்து பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வை ஒட்டி, வரலாறு காணாத அளவில், 2300 போலீசார், 20 பேர் கொண்ட கமாண்டோ படை, 15 மகளிர் போலீசார் அடங்கிய சிறப்புப் படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பெண் போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு கோரி சில பெண்கள் பம்பாவில் முகாமிட்ட நிலையில், மலைப்பாதையை மறித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் இன்று இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பம்பை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.,
ஆனால், பக்தர்களுக்குப் போதுமான குடிநீர், கழிவறை, ஓய்விடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது.