மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதன் பின்னரே சபரிமலையில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸாரால் நிலையைக் கட்டுப் படுத்த இயலாத நிலையில், மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஸ்ரீவல்ஸன் போலீஸாரின் மைக்கிலேயே நிலைமையை எடுத்துச் சொல்லி, பக்தர்களை அமைதிப் படுத்தி, மீண்டும் அங்கே அமைதி நிலவச் செய்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் சந்நிதானத்தில் வழிபாடு நடத்தினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐயப்பன் கோவிலைச் சுற்றிய பகுதிகளில் முதல் முறையாக 50 வயது கடந்த பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும் பேருந்துகள் இயக்கத்தை மாநில அரசு நிறுத்தி விட்டதால், சபரிமலைக்கு வந்த ஐயப்ப பக்தர்கள், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கான 20 கி.மீ தொலைவை நடந்து சென்றே கடந்தனர்.
மேலும் ஒரு நாள் பூஜை என்றாலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்த போதிலும், பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் செய்யப் படவில்லை. நீர் நிலையம் பூட்டப் பட்டிருந்தது. தண்ணீர் தொட்டிகளில் ஒரு சொட்டு குடிநீரும் இருக்கவில்லை. குழாய்கள் நீர் வரத்தின்றி காற்றாடின. இதனால் பக்தர்கள் பெரும் அவதியுற்றனர்.
இந்நிலையில், இன்றைய வழிபாட்டுக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு 10 மணிக்குச் சாத்தப்படுகிறது.