ஹைதராபாத்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருப்பதி வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில மனித உரிமை சங்கம், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான அரசு வக்கீல், இன்னும் பிரேத பரிசோதனை நடைபெறாத நிலையில், விசாரணையை தள்ளி வைத்து கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனித உரிமை சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் கிராந்தி சைந்தன்யா, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ள ஆந்திர காவல்துறை காலக்கெடு விதித்துள்ளது, எனவே இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆந்திர மாநில அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், என்கவுண்டரில் உயிரிழந்தவர்களின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் உடல்களை சரியான முறையில் பாதுகாத்து கௌரவமாக அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை உடல்களை அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தடயவியல் நிபுணர்களைக் கொண்டு உடல்களை சோதனையிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த என்கவுண்டர் தொடர்பான தகவல்களை ஆந்திர தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் ஆகியோர் 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். -என்று கூறினர்.
செம்மர படுகொலை: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari