கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் 16 நாட்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 14-ம் தேதி முதல் வெள்ள பாதிப்பால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. விமான சுற்றுச் சுவர் இடிந்து, ஓடுதளம் உள்பட பிற உள்கட்டமைப்புக்களும் பலத்த சேதத்தை சந்தித்தன.
இதையடுத்து, 220 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட கொச்சி விமான நிலையம் வெள்ள நீர் வடிந்ததும் கடந்த 26-ம் தேதியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விமான நிறுவனங்கள் உள்பட பல தரப்பும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பிறகு இன்று விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி 5 நிமிடங்களுக்கு புனேவிலிருந்து பெங்களூரு வழியாக கொச்சின் வந்த இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது.




