வாஜ்பாய் 91 ஆவது பிறந்த நாள்: மோடி நேரில் சென்று வாழ்த்து

புது தில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்பட கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் தில்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரான பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து தில்லி வந்தடைந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னரே தனது இல்லத்துக்குச் சென்றார்.