ஆப்கன் நாடாளுமன்றக் கட்டத்தை திறந்து வைத்த மோடி: ஒரு பகுதிக்கு அடல் பெயர் சூட்டல்

 

காபூல்:

தலிபான் பயங்கரவாதிகளுடன் நடந்த போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியுள்ளது. இந்தக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தியா-ரஷ்யா இடையே ஆண்டு தோறும் நடக்கும் கூட்டம் இது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இரு நாடுகள் இடையே ராணுவம், அணு சக்தி, வர்த்தகம், தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இரு நாட்கள் பயணத்தை நிறைவு செய்து கொண்ட பிரதமர் மோடி நேற்று அதிகாலை ஆப்கானிஸ்தான் சென்றார். தலைநகர் காபூலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் மோடியை வரவேற்றார்.

ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா சார்பில் ரூ710கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இதன் இரு அவைகளிலும் உள்ள 294 உறுப்பினர்களும் அமரும் வகையில் நவீன கலையம்சத்துடன் உள்ள அரங்கம் இந்தக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர் அறை, மாநாடுகள் அறை, உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

4 வருடங்களுக்கு முன்பே இந்த கட்டடம் கட்டப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போனது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் … ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தருணத்தில் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அனைத்து எம்.பிக்களுடன் இணைந்து இருப்பதை நான் கவுரமாக கருதுகிறேன். ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவாக இருந்தது. அவருடைய பிறந்த நாளில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. இதைவிட மிகச்சிறந்த நாள் வேறொன்றும் இல்லை. நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு வாஜ்பாய் பெயர் சூட்டியிருப்பது உள்ளத்தை தொடுவதாக இருக்கிறது.

இந்தியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் ஒருவருக்கு ஒருவர் எல்லையற்ற அன்பை செலுத்தி வருகிறார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவால் கிராமப்புறங்களில் பள்ளிகள் அமைப்பது நீர் பாசன வசதி, குழந்தைகள் நலம், பெண்களுக்கான வேலை வாய்ப்பு போன்றவை மேம்படும். நமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பது அவசியம். மின் சப்ளை, மின் நிலையங்கள் அமைப்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீடுகளில் வெளிச்சம் கிடைக்கும்… என்று பேசினார்.

இதன் பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கனியுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புக்காக 25 ஹெலிகாப்டர்கள் அளிக்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். எனவே பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.