சபரிமலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நவ.15 வியாழக்கிழமை நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அத் தீர்ப்பினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தை பாஜக., அரசியல் ஆக்குகிறது என்றும், அது வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் பிணரயி விஜயன் கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக வரும் நவ.16 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
நவ.16 அன்று கோயில் நடை திறக்கப்பட உள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த ரஞ்சன் கோகாய் அமர்வு, சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22ல் விசாரிப்பதாக ஏற்கெனவே கூறிவிட்டதாகவும், அதற்கு முன் எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் மண்டல பூஜை சீசனுக்காக நடை திறக்கப்படும் நிலையில் பாஜக., போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, நடை திறப்பதற்கு முன் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், பாஜக., தற்போது சபரிமலை பாதுகாப்பு யாத்திரையை மேற்கொண்டிருக்கிறது.




