
திருவனந்தபுரம்: கேரளத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் சசிகலா டீச்சரை சபரிமலையில் காவல்துறை அத்துமீறி கைது செய்ததைக் கண்டித்து
கேரளாவில் பாஜக ஹிந்து அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நேற்று இரவு ஐக்கிய வேதி அமைப்பின் தலைவி சசிகலா (வயது 56) சபரிமலைக்குச் சென்றார். ஆனால், இரவு நேரம் எனக் கூறி, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சசிகலா அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரைக் கைது செய்த போலீசார் அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில், சசிகலா டீச்சர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 13 அரசு பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், கேரளத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால், உச்ச நீதிமன்றம் மக்களின் மனநிலையை உணர்ந்து கொள்ளாமல், தன்போக்கில் செயல்படுவதால், மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இதனால் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த மாதம் 17ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்குச் செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை ஐயப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, காட்டுமிராண்டித் தனத்தை வெளிப்படுத்திய கேரள காவல்துறையினர், பக்தர்கள் வந்த வாகனங்களை அடித்து உடைத்து, சேதப் படுத்தி, லைசென்ஸ் ரவுடிகள் போல் செயல்பட்டனர். இது கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸாரே கம்யூனிஸ்ட் ரவுடிகள் போல் செயல்பட்டதால், சபரிமலைக்குச் செல்லும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷங்களை எழுப்பினர்.
அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கு தரிசனத்துக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு தரிசனத்துக்குப் பின்னர் ஜனவரி 20ஆம் தேதி கோவில் நடை மூடப்படும்.