மறைந்த கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரிஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்து நடிகர் அம்பரிஷ் நேற்று சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
கன்னட மொழியில் 200 படங்களுக்கு மேலாக நடித்துள்ள நடிகர் அம்பரிஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அம்பரிஷ் கன்னட திரையுலகில் ரிபெல் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.
இவர், கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சாராகவும் பதிவி வகித்துள்ளார்.
இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு அம்பரீஷ் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்பரிஷின் நெருங்கிய நண்பர் நடிகர் ரஜினி நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழ், கன்னட, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



