தேசிய பால் தினத்தில், பால்வளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்…! இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்….! பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர் களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சார்பில் அதன் நிறுவுனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்த அறிக்கையில்.
குடிநீர், மருத்துவம் இவற்றுக்கு அடுத்தபடியாக உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தைப் பெற்று இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக திகழ காரணமான வெண்மைப் புரட்சியை உருவாக்கிய “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் நமது தேசத்தின் பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பால் முகவர்களுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் வளத்துறையின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற தொழிலாளர்களுக்கும் குறைந்த வருவாய், உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, போதிய உறக்கமின்மை போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும் கூட வெயில், பனி, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், சமூக விரோதிகளால் எந்த ஒரு பாதிப்பு வந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற சேவையை வழங்கி வருவதோடு, பால் உற்பத்தியில் இந்தியாவை தலை நிமிரச் செய்து உலகளவில் பால் உற்பத்தியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவும், இந்தியா முழுவதும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மனதில் கொண்டு தன்னலம் கருதாமல் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் “தேசிய பால் தினம்” நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்தியா முழுவதும் பொதுமக்கள் அருந்தும் பாலில் 64%கலப்படம் தான் எனவும், உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்கள் பாலில் கலப்படம் செய்வது உண்மை தான் எனவும் அதிர்ச்சிகரமான தகவலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து பல ஆண்டுகள் கடந்த போதும் பொதுமக்களுக்கு கலப்படமற்ற, தரமான பால் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் உறுதிபடுத்தாத நிலை தான் நீடிக்கிறது. எனவே உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலினை தரமான, கலப்படமற்ற வகையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடவும், பால் வாங்கவே வழியில்லாமல் தவிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் தரமான பால் கிடைத்திடவும் மத்திய, மாநில அரசுகள் இனியாவது போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும்,
சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில், உற்பத்தியில் இந்தியா முழுவதும் தன்னலம் கருதாமல் செயல்பட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் நலன் காத்திடும் வகையிலும், பால் உற்பத்தியையும், பால் விநியோகத்தையும் ஊக்குவிக்கின்ற வகையிலும் மத்திய அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் எனவும்,
இந்தியா முழுவதும் பால் உற்பத்தியில், பால் விநியோகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் நலப்பணியாற்றி வரும் பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் “தேசிய பால் தினம்” அன்று “தேசிய விருது” வழங்கி கெளரவப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்… என்று கோரியுள்ளார்.