பதான்கோட் தாக்குதல் குறித்து பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி:

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பெங்களூரில் இருந்து தில்லி திரும்பியதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பதான்கோட் தாக்குதல் குறித்து அஜித் தோவால் விளக்கம் அளித்ததாகவும், இந்தத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான உறவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.